முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காணொலி காட்சி வழியாக நடக்கிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னெடுப்புகளை தொடங்கி உள்ளன. மாவட்ட அளவில் கட்சியை பலப்படுத்தும் பணியிலும் முனைப்பு காட்டி வருகின்றன.
அந்த வகையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மக்கள் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்து களப்பணியை தொடங்கி உள்ளது. பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பிரசார நடைபயணத்தை தொடங்கி உள்ளார்.
கூட்டணி இல்லாமல் தனித்து செயல்படும் பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. ஒவ்வொரு கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளதால் நாடாளுமன்ற தேர்தல் என்னும் திருவிழா களைகட்ட தொடங்கி இருக்கிறது. ஆளும்கட்சியான தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி உள்ளது. 2 ஆண்டு கால தி.மு.க. அரசின் சாதனைகளை முன் நிறுத்தி மக்களை சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது.
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா மூலமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தி.மு.க. அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் பிரசார வியூகம் அமைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தலை தி.மு.க. வழங்கியுள்ளது. அந்த வகையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் காணொலி காட்சி வழியாக நடக்க உள்ளது.
துரைமுருகன் அறிவிப்பு
மாவட்டம் வாரியாக கட்சியின் வளர்ச்சி பணிகள், உறுப்பினர் சேர்க்கை, கள நிலவரம், தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட இருக்கிறது.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காணொலி காட்சியாக நடக்கிறது. இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.