பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு
பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள 39 நாடாளு மன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், விதிமுறைகளுக்கு புறம்பாக தேர்தல் பரப்புரையில் பள்ளி மாணவர்களை பா.ஜ.க. பயன்படுத்தியது தொடர்பாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதற்காகவும் நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், எங்கள் கட்சி மற்றும் எங்கள் தலைவரின் நற்பெயரைக் குறைக்கும் வகையில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். சட்டவிரோதமாக, வெற்றி பெற வேண்டும் என்ற தவறான நோக்கத்துடன், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெறுப்பு மற்றும் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். கோவில்களை தி.மு.க. அழிப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவதூறு பரப்பி, வெறுப்பை தூண்டும் விதமாக பேசுகிறார். தொடர்ந்து பிரதமர் மோடியின் கோவை ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது. என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.