தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்


தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்
x

இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) தி.மு.க. இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

சென்னை,

இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி, தி.மு.க. இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

இதுகுறித்து, தி.மு.க. மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

அத்தனை மொழிகளும் சமம்

இந்தி எதிர்ப்பு என்பது ஒரு நூற்றாண்டாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தி திணிப்பு என்பது அவ்வப்போது வருவதும், பின்பு போராட்டங்கள் மூலம் தடுக்கப்படுவதும் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கிய போராட்டம் இது.

அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்த உரிமைப்படி, இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளும் சமம். இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. 1965-ம் ஆண்டுக்கு முன்பே போராட்டம் நடத்தியது. இதுதொடர்பாக, அண்ணா நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, பிரதமராக இருந்த நேரு, "இந்தி பேசாத மக்கள் விரும்பாத வரை இந்தி கட்டாயமாக்கப்படாது" என்று உறுதியளித்தார்.

பன்முகத்தன்மைக்கு எதிரானது

அலுவல் மொழி சட்டம் திருத்தப்படவில்லை. தற்போது முதல் முறையாக மத்திய மந்திரி அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இதன்மூலம் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் இனி ஆங்கிலம் தேவையில்லை, இந்தி மட்டும் போதும் என்றநிலை வந்துவிடும்.

இது நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானது ஆகும். தமிழக மாணவர்கள் இனி ஐ.ஐ.டி.யில் படிக்க முடியாத நிலை வரும். உலகத்தில் உள்ள அத்தனை நூல்களும் ஆங்கிலத்தில் கிடைத்து வருகின்றன. இதை தடுக்க இப்போது முயற்சி நடக்கிறது. மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு தடுக்கப்படும்.

ஒரே பொது நுழைவுத்தேர்வு

சமூகநீதி, சமத்துவம், சமவாய்ப்புக்கு எதிரானது. இனிவரும் காலங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆங்கிலத்துக்கு பதில் இந்தி மயமாக்கும் முயற்சி நடக்கிறது. வருகிற காலங்களில், மத்திய அரசின் தொடர்பு மொழி இந்தியாக இருக்கும் என சொல்கிறார்கள்.

இந்த பிரச்சினைக்கு மத்தியில், மத்திய கல்வித்துறை இணை மந்திரி அளித்த பேட்டியில், இனி எல்லா படிப்புக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வு என்கிறார். ஏற்கனவே, மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து வருகிறோம்.

எனவே, இதுபோன்ற சூழ்நிலையில்தான், இந்தி திணிப்பை எதிர்த்தும், ஒரே பொது நுழைவுத்தேர்வை கண்டித்தும் தி.மு.க. இளைஞர் அணி - மாணவர் அணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story