வள்ளலார் பெருவெளியை அபகரிக்கிறது தி.மு.க. அரசு - சீமான் குற்றச்சாட்டு


வள்ளலார் பெருவெளியை அபகரிக்கிறது தி.மு.க. அரசு - சீமான் குற்றச்சாட்டு
x

வள்ளாலார் ஆய்வு மையத்தை வடலூரிலேயே வேறு பகுதியில் அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் கண்டு தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலாரை வணங்கிப் போற்றுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடும் வடலூர் பெருவெளியை அடியவர்கள் மற்றும் வடலூர் வாழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாடு அரசு அபகரித்து ஆய்வுமையம் அமைக்கும் பணிகளை தொடங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஐயா வள்ளலாரின் மெய்யியல் வழியைப் பின்பற்றும் அடியவர்கள் பல லட்சக்கணக்கில் கூடும் தைப்பூசத்திருநாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்ற நாம் தமிழர் கட்சியின் நெடுநாள் கோரிக்கையை முந்தைய அ.தி.மு.க. அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 7-ம் நாள் ஆட்சி முடியும் தருவாயில் மிக காலதாமதமாக நிறைவேற்றியது.

ஆரிய இருள் நீக்கவந்த பேரருளாளர் வள்ளலாரின் புகழைப் போற்றுவதற்கோ, அவர் காட்டிய சமத்துவ வழியைப் பரப்புவதற்கோ தமிழ் மண்ணை கடந்த அரை நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்துவரும் இரு திராவிடக் கட்சிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு திடீரென்று இப்போது வள்ளலாரின் மீது பற்றுக்கொண்டவர்கள் போல் காட்டிக்கொண்டு, வள்ளலார் பெருவெளியை கைப்பற்றி சிதைப்பதென்பது முழுக்க முழுக்க உள்நோக்கமுடையதாகும்.

70 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் ஆய்வு மையத்தால் அங்கு கூடும் அடியவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாக நேரிடும் என்பதோடு, கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நிகழவும் வாய்ப்பேற்படும் என்பதால் அதனை வடலூருக்கு அருகிலேயே வேறிடத்தில் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் மற்றும் அடியவர்களின் நியாயமான கோரிக்கையை தி.மு.க. அரசு ஏற்கமறுப்பது அதன் எதேச்சதிகாரபோக்கையே காட்டுகிறது.

தி.மு.க. அரசின் இத்தகைய அதிகார அடக்குமுறைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தமது கண்டனத்தை பதிவு செய்து வருவதுடன், எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தும், பங்கெடுத்தும் வருகிறது. குறிப்பாக 10.01.24 அன்று அடியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெடுத்த பட்டினி அறப்போராட்டம் உள்ளிட்ட ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் நாம் தமிழர் கட்சி தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்து பங்கெடுத்தும் வருகிறது.

ஆனால், இத்தனை எதிர்ப்பையும் மீறி, வள்ளலார் பெருமானார் எதிர்கால மக்கள் திரளைக் கருத்தில் கொண்டு தொலைநோக்கு சிந்தனையுடன் அடியவர்கள் நலனுக்காக உருவாக்கிய பெருவெளியை தி.மு.க. அரசு ஆய்வு மையம் அமைப்பதென்பது வள்ளல் பெருமானாருக்கும், அடியவர்களுக்கும், வடலூர் வாழ் பெருமக்களுக்கும் மட்டுமல்ல தமிழினத்திற்கு, அதன் மெய்யியல் மீட்சிக்கும் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். அதிகார கொடுங்கரங்களால் வள்ளலார் பெருவெளியை அபகரிக்கும் தி.மு.க. அரசிற்கு, வேறு ஏதேனும் சாமியார் மடத்தின் மீது கை வைக்கத் துணிவிருக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய உயிர்மநேயர், தமிழர் மெய்யியல் மீட்பர் வள்ளல் பெருமானார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியைக் கையகப்படுத்தும் முடிவை கைவிட்டு வள்ளாலார் ஆய்வு மையத்தை வடலூரிலேயே வேறு பகுதியில் அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென மீண்டுமொருமுறை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

வள்ளலார் பெருமானார் அமைத்து அளித்த பெருவெளியை மீட்க நடைபெறும் அனைத்து அறப்போராட்டங்களிலும் நாம் தமிழர் கட்சி இனியும் தோள்கொடுத்து துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story