தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம் - அமைச்சர் சேகர்பாபு


தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம் - அமைச்சர் சேகர்பாபு
x

‘‘அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தி தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம்’’, என அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டினார்.

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமாளிக்க நடவடிக்கை

வருகிற 9-ந்தேதி கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை சமாளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.

பருவமழை காலங்களில் சாலையில் பெரிய பள்ளங்கள் எதுவும் ஏற்பட்டால் அதனை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழைக்கு பிறகு சிறிய பள்ளங்களை சரி செய்து சாலைகள் அமைக்கப்படும்.

பழமையான கட்டிடங்களில்...

புளியந்தோப்பு, சவுகார்பேட்டை பகுதியில் கட்டிடம் இருந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, இடிந்த கட்டிடமானது பழமையான கட்டிடமாகும். அதனை அப்புறப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. சென்னை மாநகராட்சியும் கட்டிடத்தை இடித்திட நோட்டீஸ் வழங்கி உள்ளது. ஆனாலும் கீழமை நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற்று குடியிருந்து வந்துள்ளனர்.சென்னை மாநகராட்சி பகுதியில் பழமையான கட்டிடத்தில் குடியிருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மாற்று இடத்தில் தங்க வைக்க வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். அதன்படி மாற்று இடத்திற்கு தங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் வீட்டின் உரிமையாளர்கள் கட்டிடம் சார்ந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ். பேரணி

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துபவர்களுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை. எப்படியாவது அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் பிரச்சினையை ஏற்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கமாகும். இப்படிப்பட்ட நோக்கம் நிறைவேறுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் தடைக்கல்லாக இருப்பார். தமிழகம் அமைதி பூங்காவாக தொடர்ந்து திகழ அவர் எல்லா விதத்திலும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story