தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றக்கோரி பா.ஜ.க. இன்று உண்ணாவிரதம்
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
உண்ணாவிரத போராட்டம்
சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டு இருந்தது.
வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் அங்கு உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து பிரச்சினை காரணமாக வடசென்னை மேற்கு, தெற்கு, வடகிழக்கு, மத்திய சென்னை கிழக்கு, மேற்கு, தென் சென்னை, தென் சென்னை கிழக்கு ஆகிய 7 மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்தும்படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
அண்ணாமலை
இதற்கு பா.ஜ.க. தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க போலீஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது. இங்கு நடக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.
மாவட்டங்களில் நடக்கும் உண்ணாவிரத போராட்டங்களுக்கு மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமை தாங்க இருக்கிறார்கள்.