மதுவிலக்கை அமல்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன் பேட்டி


மதுவிலக்கை அமல்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன் பேட்டி
x

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பீகார், குஜராத் மாநிலங்களில் மதுவிலக்கு இருக்கும்போது தமிழ்நாட்டில் ஏன் இருக்கக்கூடாது?. அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கில் உடன்பாட்டுடன் இருக்கும் நிலையில் கடைகளை மூடுவதில் என்ன சிக்கல் இருக்கிறது?. மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும்.

மது ஒழிப்பு மாநாட்டை கூட்டணிக் கணக்குடன் இணைத்துப் பார்க்க வேண்டாம். மது ஒழிப்பு மாநாட்டில் லட்சக்கணக்கான மகளிரை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். விடுதலை சிறுத்தை கட்சி மாநாட்டில் கட்சிகள் வரம்புகளை கடந்து அனைவரும் ஒரே குரலில், ஒருமித்த குரலில் ஜனநாயக அடிப்படையில் கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். தேர்தலுக்கான அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. 24 மணி நேரமும் கட்சி சார்ந்த நிலைப்பாட்டை எடுக்க முடியாது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மது விலக்கை ஆதரிக்கின்றன. மதுவிலக்கு கோரிக்கையை திமுக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கு என்பது திமுகவிற்கும் உடன்பாடான கருத்துதான். மதுவிலக்கு விவகாரத்தில் உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். திமுகவிற்கு முரணான கருத்தை நாங்கள் சொல்லவில்லை. மக்களின் கோரிக்கையை நான் முன்வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story