தி.மு.க. அரசும், அமைச்சர்களும் பா.ஜனதா அரசுக்கு எதிராக பொய் பிரசாரம்;மத்திய மந்திரி கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு


தி.மு.க. அரசும், அமைச்சர்களும் பா.ஜனதா அரசுக்கு எதிராக பொய் பிரசாரம்;மத்திய மந்திரி கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு
x

தி.மு.க. அரசும், அமைச்சர்களும் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றனர் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி கூறினார்.

ஈரோடு

தி.மு.க. அரசும், அமைச்சர்களும் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றனர் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி கூறினார்.

ரேஷன் கடையில் ஆய்வு

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று ஈரோடு வந்த அவர் குமலன்குட்டை பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அரிசி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்றும், பொருட்களின் தரம் குறித்தும், அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக ஈரோடு வில்லசரம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி பேசியதாவது:-

தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரின் அதிகார துஷ்பிரயோகம் போன்ற செயல்களால் பொதுமக்கள், பிரதமர் மோடி தலைமையிலான மாற்றத்தை விரும்புகின்றனர்.

தமிழ் சங்கமம்

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய அரசின் திட்டங்களையும், தங்களது திட்டங்களாக தமிழக அரசு கூறி வருகிறது. எனவே பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மக்களை அணுகி மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரிவித்து வருகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பேசும்போது, தமிழ் மொழி, கலாசாரம், தமிழ் புலவர்கள் போன்றவை குறித்து பெருமையாக குறிப்பிட்டு வருகிறார்.

சமீபத்தில் காசி தமிழ்சங்க விழா வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தமிழக மக்களை காசிக்கும், வாரணாசிக்கும் அழைத்து சென்று கலாசார பறிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய அரசுக்கு எதிராக...

தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறது. ஆனால் தி.மு.க. அரசும், அதன் அமைச்சர்களும், மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் பொய்யான பிரசாரத்தை செய்து வருகின்றனர். விரைவில் இதற்கு முடிவு கட்டி, மக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 84 கோடி ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மத்திய அரசு 5 கிலோ இலவச அரிசி வழங்குகிறது. ஆனால், ரேஷன்கடைகளில் பிரதமர் மோடி படமோ, மத்திய அரசின் சின்னமோ இடம்பெறுவதில்லை. வருகிற 2024-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 50 சதவீதத்திற்கு மேலான தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு மத்திய மந்திரி கிஷன் ரெட்டி கூறினார்.

கூட்டத்தில் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் வேதானந்தம், விவசாய பிரிவு மாநில துணைத்தலைவர் டி.தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Related Tags :
Next Story