மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு
மத்திய அரசின் திட்டத்தில் பெற்ற நிதியில் முடித்தவற்றை தனது சாதனைகளாக முதல் அமைச்சர் சொல்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் தரும் விதமாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மாநில வளர்ச்சிக்கோ, மக்கள் நலனுக்கோ எந்தத் திட்டங்களையுமே செயல்படுத்தாமல், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், வெறும் விளம்பரங்களை வைத்தே ஓட்டிக் கொண்டிருக்கும் ஸ்டிக்கர் மாடல் தி.மு.க அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், மீண்டும் ஒரு முறை மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முயன்று அம்பலப்பட்டிருக்கிறார்.
பள்ளிக் கல்வி முன்னேற்றத்துக்கான மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.5,858.32 கோடி. தி.மு.க.வின் சாதனைகளாக முதலமைச்சர் காட்டிக் கொள்ள முயற்சிப்பவை அனைத்துமே, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்படி, மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்பட்டவைதான். பள்ளிக் கல்வியில் திமுகவின் ஒரே சாதனை, கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை, இரண்டு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளுக்கு வழங்காமல் இருந்ததுதான். உண்மை இப்படி இருக்க, சிறிதும் கூச்சமே இல்லாமல் இவற்றை திமுகவின் சாதனையாகக் காட்டிக் கொள்ள முயற்சிப்பது, நகைப்பை ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை பயன்படுத்தி, பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்திற்கான ரூ. 1,000 கோடிக்கான ஒப்பந்தத்தை, தமிழக அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்துக்கு வழங்காமல், கேரள மாநில அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்துக்கு வழங்கியதன் பின்னணியை முதலமைச்சர் தெளிவுபடுத்துவாரா?"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.