தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை: கடன் தொல்லை காரணமா?


தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை: கடன் தொல்லை காரணமா?
x

தி.மு.க. பெண் கவுன்சிலர் கணவர், மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் கடன் தொல்லையால் உயிரை மாய்த்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுனைச் சேர்ந்தவர் மோகன்லால். இவருடைய மூத்த மகன் அருண்லால் (வயது 52). இவர் ராசிபுரத்தில் உள்ள கடைவீதியில் நகைக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி தேவி பிரியா (42). இவர் ராசிபுரம் நகராட்சியின் 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார்.

இந்த தம்பதியினருக்கு ரித்திகா (21), மோனிஷா (16) என்ற 2 மகள்கள் இருந்தனர். பி.காம். பட்டதாரியான மூத்த மகள் ரித்திகா பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அருண்லால், மனைவி மற்றும் இளைய மகள் மோனிஷா ஆகியோருடன் வீட்டின் மேல் தளத்தில் குடியிருந்து வந்தார். வீட்டின் கீழ் தளத்தில் முன்னாள் கவுன்சிலரும், அருண்லாலின் தாயாருமான சுசீலா வசித்து வருகிறார். மோனிஷா ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுசீலா வெளியே சென்று விட்டதாக தெரிகிறது. வீட்டின் மேல் தளத்தில் வசித்த அருண்லால், தேவி பிரியா ஆகியோர் மின்விசிறியில் உள்ள கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களுடன் இருந்த இளைய மகள் மோனிஷா படுக்கையில் பிணமாக கிடந்தார். கணவன், மனைவி இருவரும் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு மகள் இறந்ததை உறுதி செய்த பின்னர் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், நேற்று காலை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் அருண்லால் வீட்டை எட்டி பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கீழ் தளத்தில் சுசீலா இல்லை. இதனால் மேல் தளத்தில் உள்ள அருண்லால் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததையும், அவர்களது மகள் மோனிஷா படுக்கையில் பிணமாக கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி ராசிபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடன் தொல்லையா?

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தற்கொலை செய்து கொண்ட தி.மு.க. பெண் கவுன்சிலர் தேவி பிரியா, கணவர் அருண்லால், இளைய மகள் மோனிஷா ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அருண்லாலின் தம்பி நந்தலால் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மகளிடம் போனில் பேசிய கவுன்சிலர்

இதற்கிடையே தனது தாய், தந்தை மற்றும் தங்கை தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் ரித்திகா கண்ணீருடன் பதறியடித்து கொண்டு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு ராசிபுரத்துக்கு வந்தார். பின்னர் அவர் தனது, தந்தை, தாய் மற்றும் தங்கையின் உடல்களை பார்த்து கதறி அழுதார்.

இது ஒருபுறம் இருக்க நேற்று முன்தினம் மதியம் கவுன்சிலர் தேவி பிரியா மகள் ரித்திகாவுக்கு போன் செய்து, நீ வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்து கொள் என்றும், இனி உன் வாழ்க்கையை நீதான் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ரித்திகாவுக்கு இதில் ஏற்பட்ட சந்தேகம் தீர்வதற்குள் தாய், தந்தை, தங்கை தற்கொலை செய்து கொண்டது அவரை மீளாதுயரில் ஆழ்த்தி உள்ளது.


Next Story