வேலூரில் 17-ந் தேதி தி.மு.க. பவள விழா: 'நாற்பதும் நமதே-நாடும் நமதே'என்ற இலக்கை அடையும் விழாவாக அமையட்டும் - மு.க.ஸ்டாலின்
வேலூரில் 17-ந் தேதி நடைபெற உள்ள தி.மு.க. பவள விழாவையொட்டி தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ‘நாற்பதும் நமதே-நாடும் நமதே' என்ற இலக்கை அடைந்திடும் விழாவாக இந்த விழா அமையட்டும் என கூறி உள்ளார்.
முதல்-அமைச்சர் கடிதம்
வேலூரில் 17-ந் தேதி தி.மு.க. பவள விழா முப்பெரும் விழாவாக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் முன்பாக, 'தி.மு.க. தோன்றிவிட்டது' என அறிவித்தார் பேரறிஞர் அண்ணா. 1949-ல் அவர் உருவாக்கிய இயக்கம், அண்ணாவின் கொள்கை தம்பிகளால் வளர்க்கப்பட்டு, அவரது தம்பிகளில் தலையாய தம்பியான கருணாநிதியால் அரை நூற்றாண்டுக்கு மேல் கட்டிக்காக்கப்பட்டு, இன்று உங்களில் ஒருவனான என் தலைமையில் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கிற வேளையில் தி.மு.க. 75-ம் ஆண்டில் பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது.
தொண்டர்களின் பங்கு அளப்பரியது
ஒரு மாநில கட்சி முக்கால் நூற்றாண்டு காலம் மக்களின் நலன் காக்க உறுதியாக போராடி, இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநில கட்சியால் அந்த மாநிலத்தில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியும் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தி இந்தியாவை வழிநடத்தக்கூடிய வகையில் தனக்கென தனித்துவமான இடத்தை பெற்று திகழ்கிறது என்றால் அந்த பெருமை நம் உயிராகவும், உதிரமாகவும் திகழ்கின்ற தி.மு.க.வுக்கே உரியது.
இந்த வரலாற்று பெருமையில், உடன்பிறப்புகளாம் உங்கள் ஒவ்வொருவரின் பங்கும் அளப்பரியது. சென்னை மண்ணடி பவளக்காரத்தெரு, 7-ம் எண் வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டு, ராபின்சன் பூங்கா பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட இயக்கம் தனது பவள விழாவை கொண்டாடும் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாகவும், சமூகநீதி - மாநில உரிமை - பன்முகத்தன்மை கொண்ட வகையில் இந்திய அரசியலை தீர்மானிக்கும் இயக்கமாகவும் திகழ்கிறது என்றால் இது பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி.
கண்களில் பயம்
இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பாட்னாவில் உருவாக்கியபோது ஏளனம் பேசினார்கள். இது 'போட்டோ செஷன்' என நகையாடினார் ஒன்றிய உள்துறை மந்திரி. நகையாடியவர்களின் கண்களில் பயமாடுவதை பெங்களூரு நகரில் நடந்த இந்தியா கூட்டணியின் 2-வது கூட்டத்தில் காண முடிந்தது. 3-வது கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும், அதில் மேலும் பல கட்சிகள் இணையும் என்றும் அறிவிக்கப்பட்ட போது பா.ஜ.க. அரசின் பயத்தின் விளைவை கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு நாடகம் அம்பலப்படுத்திவிட்டது.
லட்சியங்களை நிறைவேற்றும்போது, அவற்றுக்கு தடையாக - எதிராக நிற்கின்ற கொள்கை எதிரிகளை அடையாளம் கண்டு ஜனநாயக களத்தில் வீழ்த்துவதே நம் முன் நிற்கும் முதன்மையான பணி. வெற்றி - தோல்விகளைக் கடந்து லட்சிய பாதையில் உறுதி குலையாமல் பயணிக்கின்ற இயக்கம் தி.மு.க.
களத்தில் நாம் பெற்ற விழுப்புண்கள் அதிகம். கொடுத்த விலை இன்னும் அதிகம். ஆனால், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு, முதுகு வளையாமல், தரையில் தவழாமல், நெஞ்சை நிமிர்த்தி நின்று, 'நான் தி.மு.க.காரன், நான் கருணாநிதியின் உடன்பிறப்பு' என கம்பீரமாக சொல்கின்ற துணிவும் வலிவுமே கட்சியினரின் அடையாளம்.
நாற்பதும் நமதே
அந்த கம்பீரத்துடன் தி.மு.க. 75-வது ஆண்டு பவள விழா வேலூரில் 17-ந் தேதி முப்பெரும் விழாவாக கொண்டாட இருக்கிறது. இந்த முப்பெரும் விழாவிற்கு உடன்பிறப்புகளாம் உங்களை அழைப்பதில் உங்களில் ஒருவனாக அக மகிழ்கிறேன். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிக்கு அச்சாரமிடும் வேலூர் முப்பெரும் விழாவுக்கு கொள்கை படையாக திரண்டு வருக. கட்சியை காப்போம் - மொழியை காப்போம் - மாநில உரிமை காப்போம் - மக்கள் வாழும் வகையில் நாட்டை காப்போம் என்ற உறுதியைத் தருக.
நாற்பதும் நமதே - நாடும் நமதே என்ற இலக்கை அடைந்திட சூளுரைக்கும் விழாவாக வேலூர் முப்பெரும் விழா அமையட்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.