தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்; கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி


தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்; கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 25 Jun 2023 1:12 AM IST (Updated: 25 Jun 2023 12:44 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

திருநெல்வேலி

தேசிய அளவிலான கூட்டணி

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர், வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியாக அதாவது தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் எங்களது கூட்டணி வெற்றி பெறும்.

தேசிய அளவிலான கூட்டணியை ஒரு தேசிய கட்சிதான் முன்னெடுத்து செல்ல முடியும். தமிழகம், மராட்டியம், பீகார் போன்ற மாநிலங்களில் இந்த கூட்டணி எளிதாக அமைந்து விடும். டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டும்.

நடிகர் விஜய்

காங்கிரஸ் தேசிய கட்சியாக இருப்பதால் மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் கூட்டணி தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளன. எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட்டுகள் என்பதை கூட்டணி தலைவர் முடிவு செய்வார். தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்ற விருப்பம் உள்ளது. அந்த பதவியை வழங்குவது குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும்.

நடிகர் விஜய் எந்த சித்தாந்தத்தில் அரசியலுக்கு வருகிறார்? என தெரியவில்லை. ரசிகர்கள் கூட்டத்தை மட்டும் வைத்து அரசியல் கட்சி நடத்த முடியாது. அமலாக்கத்துறையை அரசியல் எதிரிகளை பழிவாங்க பா.ஜ.க. தவறாக பயன்படுத்துகிறது. தற்போது 500 மதுக்கடைகளை மூடி உள்ளனர். மேலும் 500 கடைகளை மூடுவதுடன், மது வாங்குவதற்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பொருளாளர் ராஜேஷ் முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக கார்த்தி சிதம்பரத்துக்கு நெல்லை வண்ணார்பேட்டை, கொக்கிரகுளத்தில் காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story