தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் - மல்லிகார்ஜூன கார்கே பேச்சு


தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் - மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
x

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

சென்னையில் நடந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

சமூக நீதிக்கு அடித்தளமுள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இலவசம் மற்றும் கட்டாய கல்வியை வழங்கிய முதல் மாநிலம் இது. சுதந்திரத்திற்குப் பிறகு விரைவான தொழில் வளர்ச்சியை கண்ட மாநிலம் தமிழகம்.

சமூக நீதிக்காகவும், அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும் தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அறிவியல் வளர்ச்சிக்கான எண்ணங்களையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் முன்னாள் பிரதமர் நேரு கொண்டிருந்தார். அந்த எண்ணம்தான் பெரியார், அண்ணா, கருணாநிதியிடம் இருந்தது. அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொடர்வார். நாம் சித்தாந்தங்களின் அடிப்படையில் இணைந்திருக்கிறோம்.

அம்பேத்தர் உருவாக்கி தந்த அரசியல் அமைப்பு சாசனம்தான் நாட்டை சமத்துவம், சமூகநீதி, சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியமைக்க உதவியது. அதுதான் தி.மு.க.வின் கொள்கையாகவும் உள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிதான் 2004, 2009-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களிலும், 2006, 2021-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிகளை கொண்டு வந்தது. இந்த கூட்டணி தொடர வேண்டும். 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலிலும் வெற்றி பெற இந்த கூட்டணி தொடர வேண்டும் என்பதற்கான அடித்தளத்தை இந்த பிறந்த நாள் விழா மேடையில் ஏற்படுத்த வேண்டும்.

பிரிவினை சக்திக்கு எதிரான போரில் ஒரே எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story