நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.-பா.ஜ.க. இடைேயதான் போட்டி என அண்ணாமலை கூறுவது நல்ல காமெடி - கே.எஸ். அழகிரி


நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.-பா.ஜ.க. இடைேயதான் போட்டி என அண்ணாமலை கூறுவது நல்ல காமெடி - கே.எஸ். அழகிரி
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.-பா.ஜ.க. இடைேயதான் போட்டி என அண்ணாமலை கூறுவது நல்ல காமெடி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.

உண்மைக்கு மாறான தகவல்

சிவகாசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர், தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி கூறி உள்ளார். தமிழகத்தில் உள்ள கோவில்களை அரசு கைப்பற்றி இருப்பதாக பிரதமர் மோடி பேசி இருக்கிறார். இது உண்மைக்கு மாறான தகவல். கோவில்கள் ஒரு காலத்தில் கொள்ளையர்களின் கூடாரமாக இருந்தது. வலிமையானவர்களின் சொத்தாக இருந்தது. ஆங்கிலேயர் காலத்திலேயே கோவில்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் வந்தது.

தேர்தலில் கூடுதல் இடம்

அதன் பின்னர் பெருந்தலைவர் காமராஜர் இந்து அறநிலையத்துறையை உருவாக்கினார். தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலை விட வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் இடம் கேட்போம். பட்டாசு தொழிலுக்கு உள்ள பிரச்சினைகளை சரி செய்ய எனது தலைமையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளோம். தூத்துக்குடி துறைமுகத்தில் பட்டாசுகளை அனுப்ப தேவையான வசதிகள் இல்லை. இதனை ஏற்படுத்த வலியுறுத்தப்படும்.

புது முகங்களுக்கு வாய்ப்பு

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் புது முகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். சிறப்பாக செயல்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேதான் போட்டி என்று அண்ணாமலை கூறியது நானும் ரவுடி தான்..... நானும் ரவுடி தான்..... என்று வடிவேல் படத்தில் கூறும் நல்ல நகைச்சுவை காட்சி போல் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியினர் 40 தொகுதியிலும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். நாங்கள் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளை மீண்டும் கேட்டு பெறுவோம். இந்தியா கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். காவிரி பிரச்சினை தேர்தலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பெங்களூரு பட்டாசு விபத்தில் இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், விஜய்வசந்த், அசோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story