ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்த வேண்டும்


ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்த வேண்டும்
x

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்த வேண்டும் என தி.மு.க. சட்டத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை

தி.மு.க. சட்டத்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமை தாங்கினார். தி.மு.க. சட்டத்துறை தலைவர் ரா.விடுதலை முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, பி.கே.சேகர் பாபு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சட்டத்துறை இணைச் செயலாளர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், ரா.தாமரைச்செல்வன், கே.எம்.தண்டபாணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி பேசும்போது, ''கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி இறுதிப்போட்டி டிசம்பர் 6-ந் தேதி சென்னையில் நடத்த வேண்டும்'' என்றார்.

அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, ''அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்க துறை கைது செய்ய அதிகாரம் இல்லை என்று கண்டுபிடித்த தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோவை பிரபல வக்கீல் துஷார் மேத்தா பாராட்டி உள்ளார். நாங்களும், கட்சியும் நன்றாக இருக்க வேண்டுமானால் நீங்கள் (வக்கீல்கள்) திறமையாக இருக்க வேண்டும்'' என்றார்.

ஆ.ராசா பேசும்போது, ''தற்போது நாடாளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு போன்றவற்றின் தரம் குறைந்து வருகிறது. ஆனால், தி.மு.க. வக்கீல்களின் தரம் குறையாமல் கோர்ட்டுகளில் வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு'' என்றார்.

ஆர்.எஸ்.பாரதி பேசும்போது ''நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை உருவாக்கும் தகுதி உள்ளவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். அதற்கு நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு உழைக்க வேண்டும். மத்திய அரசின் ரூ.7½ லட்சம் கோடி ஊழலை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்'' என்றார்.

கூட்டத்தில், ஒரே நாடு, ஒரே தேர்தலை கொண்டு வரத் துடிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். இதற்கான சட்டத்தை கொண்டு வர மத்திய பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுகிறது. இந்த சட்டம் நிறைவேறினால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சி கேள்விக்குறியாகும். இதனை கண்டித்து தமிழ்நாட்டில் தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்த இந்த கூட்டம் வலியுறுத்துகிறது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story