அண்ணா சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறந்தநாள் விழா
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் பஸ் நிலையம் அருகே மனோகரா கார்னரில் அமைந்துள்ள அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு தி.மு.க. மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள். இளங்கோ, சிவகாமசுந்தரி, ேமயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.
அ.தி.மு.க.வினர்...
இதைபோல், கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் அமைந்துள்ள அண்ணாவின் திரு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, பொருளாளர் கண்ணதாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், மாணவரணி செயலாளர் சரவணன், கரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அண்ணாவின் திரு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நொய்யல்
நொய்யல், குறுக்கு சாலை, வேட்டமங்கலம், மரவாபாளையம், சேமங்கி, செல்வா நகர், குளத்துப்பாளையம், குந்தாணி பாளையம், முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, கரைப்பாளையம், தவிட்டுப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதேபோல் புகழூர் நகர தி.மு.க. சார்பில் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே தி.மு.க. கொடி ஏற்றப்பட்டு, அண்ணாவின் படத்திற்கு புகழூர் நகராட்சி தலைவரும், புகழூர் நகர செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து மருத்துவ உதவி தொகை, கல்வி உதவி தொகை, இரு சக்கர வாகன உதவி தொகையினை நிவாரணமாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் கழகம் சார்பில் பேரூராட்சி தலைவர் ரூபா முரளிராஜா தலைமையில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.