நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
தி.மு.க. - ம.தி.மு.க. இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கணக்கை தொடங்கிவிட்டன.
தி.மு.க. கூட்டணியை பொருத்தமட்டில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம,தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளே இப்போதும் தொடருகின்றன. எனவே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை, மற்ற அணிகளுக்கு முன்னரே தொடங்கியது.
முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கியது. இதில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அதே நேரம் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடனான பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்துக்கொண்டு இருக்கிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வும் தங்கள் கட்சிக்கு கூடுதல் தொகுதி கேட்டதுடன், சொந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளது.
3 சுற்று பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், அந்த கட்சியின் உயர்மட்ட கூட்டம் வைகோ தலைமையில் நேற்று நடந்தது. அப்போது தி.மு.க. தரப்பில் இருந்து சாதகமான தகவல் தெரிவிக்கப்பட்டதால், ம.தி.மு.க.-தி.மு.க. இடையே இன்று உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தி.மு.க. - ம.தி.மு.க. இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதியை தி.மு.க. ஒதுக்கியுள்ளது.
அதன்பின்னர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். மற்ற கூட்டணிக்கு கட்சிகள் உடனான ஆலோசனைக்குபின் எந்த தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது என்பது தெரிய வரும். மாநிலங்களவை பதவி நிறைவடைய இன்னும் 15 மாதங்கள் உள்ளன. அதனால், அதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் தற்போது நடத்தவில்லை என்று கூறினார்.