தீபாவளி பண்டிகை பரிசு பொருட்கள் விழுந்ததாக ஆன்லைனில் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு
தீபாவளி பண்டிகை நேரத்தில் பரிசு பொருட்கள் விழுந்ததாக ஆன்லைனில் மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் இருந்து பொதுமக்கள் உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடி
நவீன தொழில்நுட்பத்தில் பொதுமக்களிடம் ஆன்லைனில் மோசடியில் ஈடுபடும் கும்பல் தொடர்ந்து தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே ஆன்லைன் மோசடி நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த மோசடியில் பணத்தை இழந்த சிலர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி வருவதையொட்டி மர்ம ஆசாமிகள் ஆன்லைனில் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி ஏதேனும் மோசடியில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் உஷாராக இருக்கும் படி சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பதிவுகள் உலா வருகிறது.
கடன் செயலி
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ''பண்டிகை நேரத்தில் பரிசு பொருட்கள் விளம்பரம் தொடர்பாக பொதுமக்கள் நன்கு ஆராய்ந்து விசாரித்து கொண்டு ஏமாறாமல் இருக்க வேண்டும். தங்களது எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களின் விவரங்களை கேட்டால் கொடுக்க வேண்டாம். மேலும் செல்போன் எண்ணுக்கு ரகசிய குறியீடு எண்ணை அனுப்பியிருப்பதாகவும், அது பற்றி கேட்டாலும் கூற வேண்டாம்.
இதேபோல் கடன் செயலியில் கடன் பெற வேண்டாம். இதுபோன்று ஆன்லைனில் மோசடி செய்து தங்களது பணத்தை எடுத்தால் உடனடியாக 1930 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு செய்தால் மர்ம ஆசாமிகளின் வங்கி கணக்கிற்கு பணம் பரிமாறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் இழந்த பணத்தையும் மீட்க முடியும்'' என்றனர்.