மாவட்ட வாரியாக உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல கமிட்டிக்கு மாவட்ட வாரியாக உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கொரடாச்சேரி:
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல கமிட்டிக்கு மாவட்ட வாரியாக உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பது உள்ளிட்ட திட்டங்கள் விவசாய நிலங்களையும், இயற்கை சூழலையும் பாதிக்கும். எனவே இத்திட்டங்களை காவிரி டெல்டாவில் செயல்படுத்த கூடாது என கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்ட களத்தில் நம்மாழ்வார், மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள், விவசாயிகள், பொதுநல அமைப்புகள் பங்கேற்றன. இந்த சூழலில்தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என டெல்டா மாவட்டங்களை அறிவித்தார்.
கமிட்டி அமைப்பு
அந்த அறிவிப்புக்கு பின்னர் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி கூட்டம் கூட்டப்படவில்லை. அதன் பிறகு பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், அந்த கமிட்டியில் காவிரி டெல்டா பகுதி எம்.எல்.ஏ.க்களும் இடம் பெறுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒருமுறை அந்த கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் காவிரி டெல்டாவில் செயல்பாட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனது விரிவாக்க திட்டங்களை அவ்வப்போது செய்ய முயற்சிப்பதும், அதனை எதிர்த்து விவசாயிகள் போராடுவதுமாக இருக்கிறது.
உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்
இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி காவிரி டெல்டாவில் உள்ள வடசேரியை மையமாக கொண்டு நிலக்கரி எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்பதை தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமருக்கும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல கமிட்டிக்கு மாவட்ட வாரியாக விவசாயிகளின் பிரதிநிதிகள் அடங்கிய உறுப்பினர்களை நியமித்து கூட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.