விருத்தாசலம், சிதம்பரத்தில் மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள்
விருத்தாசலம், சிதம்பரத்தில் மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
விருத்தாசலம்,
கடலூர் வருவாய் மாவட்ட அளவில் 11 குறுவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 14, 17, 19 வயது பிரிவினர்களுக்கு கால்பந்து, டேபிள் டென்னிஸ், எறிபந்து, பூப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, கொளஞ்சியப்பர் மினி ஸ்டேடியம் ஆகிய இடங்களில் நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் மேற்பார்பார்வையில் நடந்த இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், தியாகு, பிரகாசம் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நடுவர்களாக உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். 14 வயது பிரிவில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலும், 17 வயது பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் தேனி மாவட்டத்திலும், 19 வயது பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் கோவை மாவட்டத்திலும் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
சிதம்பரம்
இதேபோல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 17 மற்றும் 19 வயது இரு பிரிவு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வாலிபால், கால்பந்து, ஆக்கி, இறகுபந்து, டென்னிஸ் ஆகிய விளையாட்டு போட்டிகளை கடலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டிகளில் கடலூர், விருத்தாசலம் ஆகிய கல்வி மாவட்டங்களில் இருந்து 11 குறுவட்டங்களை சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதலிடம் பெறும் மானவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று விளையாட தகுதி பெறுவார்கள். இந்த விளையாட்டு போட்டிகளில் உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். இந்த விளையாட்டு போட்டிகளை விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜராஜசோழன் தலைமையில் ஆசிரியர்கள் பிரகாசம், தியாகு, மனோகர் ஆகியோர் செய்திருந்தனர்.