மாவட்ட அளவிலான கபடி போட்டி
சிவகளையில் மாவட்ட அளவிலான கபடி போட்டியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
ஏரல்:
ஏரல் அருகே உள்ள சிவகளையில் தி.மு.க. மற்றும் சிவகளை பறக்கும் படை கபடிக்குழு இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி சிவகளை பரும்பில் நடந்தது. தொடக்க விழாவுக்கு தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ஆறுமுகப்பெருமாள் தலைமை தாங்கினார். மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து போட்டிகள் நடந்தன. மொத்தம் 60 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் முதலிடம் பெற்ற சிவகளை பறக்கும்படை அணிக்கு ரூ.20 ஆயிரம், 2-வது இடம் பெற்ற ராஜபதி அணிக்கு ரூ.18 ஆயிரம், 3-வது இடம் பெற்ற சிவலூர் அணிக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன. ேமலும் சிறந்த 9 அணிகளுக்கும் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.