தடகள விளையாட்டில் சேர இன்று மாவட்ட அளவிலான தேர்வு
தடகள விளையாட்டில் சேர மாவட்ட அளவிலான தேர்வு பெரம்பலூரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாடு இந்தியா கேலோ திட்ட நிதியுதவியின் தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான எஸ்.டி.ஏ.டி. விளையாடு இந்தியா மாவட்ட மையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த எஸ்.டி.ஏ.டி. விளையாடு இந்தியா கேலோ மையத்தில் குறைந்தது 30 மாணவர்கள், 30 மாணவிகள் பயிற்சியில் சேர்ந்து, அவர்களை மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச மற்றும் பன்னாட்டு அளவு மற்றும் ஒலிம்பிக் அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெற செய்ய இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சேருவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் அரசு, தனியார் பள்ளி மற்றும் விடுதிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாத விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ளலாம்.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் நாளை காலை 9 மணியளவில் நடைபெற உள்ள தேர்வில் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை அதிகளவில் கலந்து கொள்ள செய்து பயன் பெற செய்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703516 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.