கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டி
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.
கடலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு முன்னிலை வகித்தார். இதையடுத்து 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக 100, 200, 400, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ராஜேந்திரன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, தடகள சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் அசோகன், இணை செயலாளர்கள் சங்கர், பாபு, கார்த்திக், ஆக்கி அகாடமி செயலாளர் கருணாகரன், பயிற்சியாளர்கள் மாயகிருஷ்ணன், இளவரசன், சிகாமணி, அருட் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.