மாவட்ட அளவிலான கலை திருவிழா
ஆரணியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நடந்தது. இதில் 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இடையே வட்டார அளவில் கலை விழா நடந்தது.
இதில் தேர்வு செய்யப்பட்ட 3,068 மாணவ -மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலை திருவிழா ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி, ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் நடந்தது.
இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நடுவராக பங்கேற்றனர்.
வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வட்டார வளமைய அலுவலர்கள், சிறப்பு பயிற்சியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்கள் பறை மோளம் அடித்தல், சங்கு ஊதுதல், சிவன் வேடம் அணிந்து பரதநாட்டியம் ஆடுதல், கரகாட்டம், ஆங்கிலேய உரை, ஆங்கிலேய நாடகம், தமிழ் நாடகம், புராண நாடகங்கள், கட்டைக்கூத்து கலைஞர்களாக வேடமிட்டும் நடித்துக் காட்டினார்.
இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான கலை திருவிழா போட்டியில் பங்கேற்பார்கள்.