பூலாம்வலசில் சேவல் சண்டைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பு
கரூர் அருகே பூலாம்வலசில் சேவல் சண்டை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தனர். இதனால் கூட்டத்தை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
பூலாம்வலசு
பொங்கல் பண்டிகை என்றாலே அனைவரது நினைவுக்கு வருவது கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு கிராமம்தான். பொங்கல் பண்டிகையில் இங்கு குறைந்தது 4 நாட்கள் நடைபெறும் சேவல் சண்டை மிகவும் பிரபலமானது. இதில் 2 சேவல்களை மோதவிட்டு சண்டையிட செய்வார்கள். கடைசியில் தோற்றுப்போன சேவலை வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளருக்கு கொடுத்து விடுவார்கள். அந்த சேவல் சண்டையில் வெற்றி பெற்றால் அந்தாண்டு முழுவதும் வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளருக்கு வியாபாரம் மற்றும் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வந்தது. இந்தசேவல் சண்டையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சேவல் உடன் வந்து பலர் கலந்து கொள்வார்கள். தினமும் சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான சேவல் சண்டை பிரியர்கள் கலந்து கொள்வார்கள்.
சேவல் சண்டை நடைபெறவில்லை
இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சேவல் சண்டை நடத்த விழாக்குழுவினர் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டது. அப்போது நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து. அதில், சேவல்களின் கால்களில் கத்திக்கட்ட கூடாது, மது அருந்தி வரகூடாது என பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.அதன்படி அந்தாண்டு சேவல் சண்டை நடைபெற்றது. ஆனால் நீதிமன்ற உத்தரவினை மீறி சேவல் கால்களின் கட்டப்பட்டிருந்த கத்திக்குத்தி ஒருவர் உயிர் இழந்தார். இதன் அடிப்படையில் உடனடியாக சேவல் சண்டை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் 2022-ம் ஆண்டும் சேவல் சண்டை நடத்த மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்காததால் சேவல் சண்டை நடைபெறவில்லை.
அனுமதி வழங்கவில்லை
இதனால் இந்தாண்டு பூலாம்வலசில் சேவல் சண்டை நடத்த வேண்டும் என ஆயத்த பணிகளில் விழாக்குழுவினர் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பிரமாண்ட பந்தல், வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்தனர். இதையடுத்து பூலாம்வலசில் சேவல் சண்டை நடத்த கரூர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்தாண்டும் எந்த அனுமதியும் வழங்கவில்லை.இதற்கிடையில் பந்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்ததால் சேவல் சண்டை இந்தாண்டு நடைபெறும் என நினைத்து நேற்று காலையில் இருந்தே வெளியூர்களில் இருந்து சேவல் சண்டை பிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தங்கள் சேவல்களுடன் பூலாம்வலசு கிராமத்தில் குவிந்தனர். மேலும் பார்வையாளர்களும் அங்கு அதிகளவில் குவிந்து இருந்தனர்.
போலீஸ் எச்சரிக்கை
ஆனால் சேவல் சண்டை நடத்தும் விழாக்குழுவினர்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சேவல் சண்டை நடைபெறும் என கூறினர். ஆனால் அவர்கள் சேவல் சண்டை உடனடியாக நடத்த வேண்டும் என கூச்சல் போட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கீதாஞ்சலி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து கலைய செய்தனர். மேலும் அந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இந்த பகுதிக்கு வரக்கூடிய வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றன. மேலும் உள்ளூர் மக்கள் வாகனங்களின் பெயர், முகவரி, பதிவெண்களை குறித்து வைத்து கொண்டு அவர்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் பூலாம்வலசில் சேவல் சண்டை நடக்குமா? நடக்காதா? என்று பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.