மானிய விலையில் நெல் விதை வினியோகம்
செங்கோட்டை வட்டாரத்தில் மானிய விலையில் நெல் விதை வினியோகம் நடந்து வருகிறது.
செங்கோட்டை:
செங்கோட்டை வட்டாரத்தில் வரும் கார் பருவத்தில் நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சான்று பெற்ற நெல் விதைகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நெல் சாகுபடிக்காக செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஐ.ஆர். 50 மற்றும் அம்பை-16 நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. அரசு இந்த ஆண்டும் நெல் விதைகளை மானியத்தில் வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்ட மத்திய, மாநில திட்டங்களின் துணை இயக்குனர் ஊமத்துரை, வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு ஆகியோர் ஆலோசனைப்படி செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு கூறுகையில், 'செங்கோட்டை வட்டாரம் புளியரை, தெற்குமேடு, புதூர், கற்குடி, செங்கோட்டை மேலூர், கீழூர், டவுன், சீவநல்லூர், இலத்தூர், அச்சன்புதூர், மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கார் பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி விதை கிராம திட்டத்தில் பயன்பெறும் பொருட்டு இணையத்தில் பதிவு செய்யலாம். மேலும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உள்ளிட்ட உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அதனையும் பெற்று விதை நேர்த்தி செய்தல், நாற்றங்காலில் இடுதல், நடவு வயல்களில் இடுதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கடைபிடிக்கலாம்' என்றார். நெல் விதை வினிேயாகத்துக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் குமார், அருணாசலம், முகமது ஜலால் மைதீன் ஆகியோர் செய்திருந்தனர்.