அரசு பஸ்கள் இயக்கும் நேரத்தில் தொடரும் குளறுபடி


அரசு பஸ்கள் இயக்கும் நேரத்தில் தொடரும் குளறுபடி
x
தினத்தந்தி 24 Sept 2023 4:45 AM IST (Updated: 24 Sept 2023 4:46 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு அரசு பஸ்கள் இயக்கும் நேரத்தில் நீடிக்கும் குளறுபடியால் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பரிதவிக்கின்றனர்.

தேனி

ஆண்டிப்பட்டிக்கு அரசு பஸ்

தேனியில் இருந்து ஆண்டிப்பட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் குன்னூர், ஆண்டிப்பட்டி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு தினமும் ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகள் தேனி பழைய பஸ் நிலையம், பங்களாமேடு, அரண்மனைப்புதூர் விலக்கு ஆகிய இடங்களில் இருந்து பஸ்களில் ஏறிச் செல்வது வழக்கம்.

காலை 8.30 மணியளவில் தேனி பங்களாமேடு பகுதியில் பஸ் நிறுத்தத்தில் மாணவிகள் சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். ஆனால், 1 மணி நேரமாக ஆண்டிப்பட்டி டவுன் பஸ்கள் எதுவும் வரவில்லை. காலை 9.30 மணியளவில் ஆண்டிப்பட்டிக்கு செல்லும் அரசு டவுன் பஸ் வந்தது. அதில் கூட்டம் அதிகம் இருந்த போதிலும் மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நேரத்தில் குளறுபடி

இதுகுறித்து மாணவிகள் சிலரிடம் கேட்டபோது, 'ஆண்டிப்பட்டிக்கு சில நாட்களில் காலை 8.40 முதல் 8.50 மணிக்குள் டவுன் பஸ் வரும். அதே பஸ் சில நாட்களில் 9.30 மணிக்கு வருகிறது. இதனால் 8.15 மணிக்கே பஸ் நிறுத்தத்துக்கு வந்து விடுவோம். சில நாட்களில் பஸ்கள் பங்களாமேட்டில் நிற்பது இல்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை. 9.30 மணிக்கு பிறகு 10 நிமிடங்களில் ஆண்டிப்பட்டிக்கும், ஆண்டிப்பட்டி வழியாக சித்தார்பட்டி, திம்மரசநாயக்கனூருக்கும் என 4 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில் 2 பஸ்களை 8.30 மணி முதல் 8.50 மணிக்குள் வந்து செல்லும் வகையில் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போதைய குளறுபடியால் அடிக்கடி கல்லூரிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டு கல்வி பாதிக்கப்படுகிறது' என்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'சென்னையில் இருந்து போடிக்கு வாரத்தில் 3 நாட்கள் ரெயில் இயக்கப்படுகிறது. காலை நேரத்தில் இந்த ரெயில் வருவதால் வாரத்தில் 3 நாட்கள் ரெயில் வருவதற்கு முன்பாக ரெயில்வே கேட்டை கடக்கும் வகையில் இயக்கப்படுகிறது. அனைத்து நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும் என்று டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.


Related Tags :
Next Story