மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி


மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி
x

மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அமைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர்

பா.ஜனதா மனு தள்ளுபடி

தமிழகத்தில் மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் மாவட்டங்களில் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை அமைக்க உத்தரவிடுமாறு அரியலூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் அய்யப்பன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்று நேற்று தீர்ப்பளித்தது. இதுகுறித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

நுகர்வோர் குறைதீர் ஆணையம்

விலைக்கு வாங்கிய பொருளில் குறைபாடு இருக்கும்போதும், பணம் செலுத்திப்பெறும் சேவையில் சேவை வழங்குபவரால் குறைபாடு நிகழும் போதும், நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலான விலை கேட்கப்படும் போதும் பாதிக்கப்படுபவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்யலாம். உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தான பொருள் அல்லது சேவை விற்பனை செய்யப்படும் போதும் நியாயமற்ற ஒப்பந்தம், நியாயமற்ற வர்த்தக நடைமுறை, கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறை ஆகியவற்றை வணிகர் அல்லது சேவையை வழங்குபவர் கடைபிடிக்கும் போதும் உற்பத்தியாளர், விற்பனையாளர், சேவை வழங்குபவர் ஆகியோர் மீதான தயாரிப்பு பொறுப்பு குறித்தும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்யலாம். நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக இருந்தாலும் மற்ற கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்டத்தில் இடமில்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தில் திருத்தம்

மனித உரிமை ஆணையங்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான எந்த ஒரு புகாரையும் விசாரணை செய்யும் அதிகாரமும், மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களை தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டு விசாரணை செய்யும் அதிகாரமும் உள்ளது. இதைப்போலவே குழந்தைகள் உரிமை ஆணையங்களுக்கு குழந்தைகள் உரிமைகள் தொடர்பான எந்த ஒரு புகாரையும் விசாரணை செய்யும் அதிகாரமும், குழந்தைகள் உரிமைகள் தொடர்பான விவகாரங்களை தாமாக முன்வந்து எடுத்துக் கொண்டு விசாரணை செய்யும் அதிகாரமும் உள்ளது.

நுகர்வோர் உரிமைகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் புகாரை எடுத்துக் கொள்ளும் அதிகாரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை. நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் நுகர்வோர் உரிமைகள் தொடர்பான அனைத்து வகையான புகார்களையும் விசாரணை செய்யவும், தாமாக முன்வந்து புகார்களை எடுத்துக் கொள்ள வேண்டுமெனில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கு புகார்தாரர் மத்திய அரசை அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story