சுங்கச்சாவடி தொழிலாளர்கள் பணிநீக்கம் சட்டவிரோதமானது - அன்புமணி ராமதாஸ்


சுங்கச்சாவடி தொழிலாளர்கள் பணிநீக்கம் சட்டவிரோதமானது - அன்புமணி ராமதாஸ்
x

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்களில் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்களில் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்களில் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நடைமுறைகளோ, விதிகளோ கடைபிடிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது!

தொழிலாளர் நிரந்தரப்படுத்துதல் சட்டம் 1981ன் படி 2 ஆண்டுகளில் 48 நாட்கள் பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அதன்படி 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 250 பேரும் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். அதை செய்வதற்கு பதிலாக பணிநீக்கம் செய்வது கண்டிக்கத்தக்கது!

சட்டவிரோத பணிநீக்கத்தை கண்டித்தும், நீக்கப்பட்டதைக் கண்டித்தும் சுங்கச்சாவடிகளில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் நெடுஞ்சாலைகள் ஆணையமோ, மாவட்ட நிர்வாகமோ பேச்சு நடத்த முன்வராதது பெரும் அநீதி ஆகும்!

ஆட்குறைப்புக்கான எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் செய்யப்பட்டுள்ள இந்த பணி நீக்கத்தை தமிழக அரசு தலையிட்டு ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்குவதற்கும் சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்!" என்று கூறியுள்ளார்.



Next Story