கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றால் 'டிஸ்மிஸ்':'டாஸ்மாக்' நிர்வாகம் எச்சரிக்கை
‘டாஸ்மாக்’ கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள் ‘டிஸ்மிஸ்’ செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக்கடைகளில் அதிகபட்ச சில்லரை விற்பனையை விட ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுவதும், இதற்கு 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பில் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் ((டிஸ்மிஸ்) என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 'டாஸ்மாக்" மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
'டாஸ்மாக்" கடைகளில் அனைத்து மதுபானம் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையின்படியே விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவர். கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தவறிய குற்றத்துக்காக கடை மேற்பார்வையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.