நோய் தாக்கும் அவலம்: புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் தொடங்கப்படுமா?
வெற்றிலையில் நோய் தாக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதால் புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் தொடங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வெற்றிலை பயிர்
கரூர் மாவட்டம் நொய்யல், புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை நன்கு விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும் அங்கிருந்து பல்வேறு மாவட்டம், மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் வெற்றிலைகளை அனுப்பி வைக்கின்றனர்.
நோய் தாக்குதல்
நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக வெற்றிலை அதிகமாக பயிரிடப்படுகிறது. இதில் கற்பூரிவெற்றிலை, வெள்ளை கொடி வெற்றிலை உள்ளிட்டவை கரூர் மாவட்டத்தில் இருந்து தான் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பனி காலம் என்பதால் வெற்றிலையில் வாடல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்குகிறது.
அதன் காரணமாக வெற்றிலையின் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், காய்ந்து வீணாகி வருகிறது. விவசாயிகள் வெற்றிலையில் வந்துள்ள நோய் என்ன நோய் என்று கண்டறிய முடியாமல் பல்வேறு மருந்துகளை தெளித்து வருகின்றனர்.
கோரிக்கை
பல ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை ஆராய்ச்சி மையம் பரமத்தி வேலூர் பகுதியில் செயல்பட்டு வந்தது. அப்போது நொய்யல் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வெற்றிலையை நோய் தாக்கும் போது அதனை பறித்துக் கொண்டு பரமத்தி வேலூர் ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு சென்று அதனை பரிசோதனை செய்து நோய் தாக்குதலுக்கு மருந்துகளை தெளித்து வந்தனர். அப்போது வெற்றிலை பாதுகாப்பாக இருந்தது. எனவே புகழூர் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோய்களை கண்டறிய முடியும்
நத்தமேட்டுப்பாளையத்தை சேர்ந்த வெற்றிலை விவசாயி தியாகராஜன்:-
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்த வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை சில காரணங்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் சிறுகமணிக்கு மாற்றி விட்டார்கள். இதனால் வெற்றிலைகளை ஆராய்ச்சி செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை புகழூர் பகுதியில் அமைக்க வேண்டும். அதனால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவார்கள். வெற்றிலையில் ஏற்படும் நோய்களை கண்டறிய முடியும்.
வாடல் நோய் வருகிறது
வேட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த வெற்றிலை விவசாயி செல்லப்பன்:-
நாங்கள் பாரம்பரியமாக வெற்றிலை கொடிக்கால் போட்டு வெற்றிலை விவசாயம் செய்து வருகிறோம். வெற்றிலையில் அடிக்கடி ஏதாவது ஒரு நோய் தாக்கி வருகிறது. நாங்கள் மருந்து கடைகளுக்கு சென்று நோய் குறித்து கூறி அவர்கள் கொடுக்கும் மருந்தை வெற்றிலையை தெளித்து வருகிறோம். பனிக்காலம் வந்தாலே வெற்றிலைக்கு வாடல் நோய் வந்து விடுகிறது. வாடல் நோய் வரும்போது எங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டங்கள் ஏற்படுகிறது. மேலும் வெற்றிலைக்கு வரும் நோய் என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாமல் மருந்து அடித்து வருகிறோம். வெற்றிலை ஆராய்ச்சி மையம் இந்தப் பகுதியில் இருந்தால் நோய் தாக்கிய வெற்றிலை கொடிகளை கொண்டுசென்று நாங்கள் ஆராய்ச்சி செய்து அதற்குரிய மருந்துகளை தெளிப்போம்.
வீண் அலைச்சல்
புகழூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க செயலாளர் ராமசாமி:-
பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தபோது, புகழூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வெற்றிலைகளை தாக்கும் நோயை கண்டறிந்து வந்தனர். தற்போது ஆராய்ச்சி மையம் மாற்று இடத்தில் இயங்கி வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ெவற்றிலைகளை நோய் தாக்கும் போது அந்த வெற்றிலை கொடிகளை பறித்துக் கொண்டு வெளியூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் நேரமும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே புகழூர் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து செயல்படுத்தினால் வெற்றிலை விவசாயிகள் பாதிப்பில்லாமல் விவசாயம் செய்ய இயலும்.
தமிழக அரசு உதவ வேண்டும்
பாலத்துறையில் உள்ள தனியார் வெற்றிலை மண்டியை சேர்ந்த செல்வம்:-
எங்கள் மண்டிக்கு பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் வெற்றிலைகளை சுமைகளாக கொண்டு வந்து தருகின்றனர். வாங்கிய வெற்றிலைகளை நாங்கள் தரம் பிரித்து பல்வேறு மாவட்டங்களுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றோம். வெற்றிலை ஆராய்ச்சி மையம் பரமத்தி வேலூரில் இருந்தவரை தரமான வெற்றிலைகள், கொண்டு வரப்பட்டது. ஆனால் வெற்றிலை ஆராய்ச்சி மையம் சிறுகமணிக்கு மாற்றியப்பின் இங்குள்ள வெற்றிலை விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். அதன் காரணமாக சரியான முறையில் நோயற்ற வெற்றிலைகளை உருவாக்க முடியவில்லை. எனவே தமிழக அரசு புகழூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை அமைத்து உதவ வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.