வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்
தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் டி.ஐ.ஜி. கலந்துரையாடினார்.
வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பு பிரிவில் உள்ள தனியார் நூற்பாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 151 தொழிலாளர்களும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 251 தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். இதேபோல் பீகார், மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளர்களும் அங்கு வேலை செய்கிறார்கள். இந்த தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
இதற்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு அரசு, போலீஸ் துறை, நூற்பாலை நிர்வாகம் உங்களுக்கு (தொழிலாளர்களுக்கு) தகுந்த பாதுகாப்பு அளிக்கும். இங்கு உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள். போலியான வீடியோக்களை நம்பி பதற்றம் அடையாதீர்கள். பிரச்சினைக்குரிய வீடியோக்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். அனைத்து தொழிலாளர்களும் போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்களை வைத்து கொள்ளுங்கள். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், உடனடியாக தொடர்பு கொண்டு தெரிவியுங்கள் என்றார்.
கூட்டத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. இந்தியில் சரளமாக பேசினார். இதனால் உற்சாகம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் தாங்களும் இந்தியில் கலந்துரையாடினர். டி.ஐ.ஜி.பேசும்போது, இங்குள்ள யாராவது பிரச்சினைக்குரிய போலி வீடியோவை பார்த்தீர்களா? என்று கேள்வி எலுப்பினார். அதற்கு யாரும் பார்க்கவில்லை என்று தொழிலாளர்கள் பதில் அளித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தனியார் நூற்பாலை சீனியர் பொது மேலாளர் ரவி, பொதுமேலாளர் சதீஷ்குமார், ஸ்பின்னிங் மாஸ்டர் ரமேஷ், தொழிலாளர் பொறுப்பாளர் மணிவேல் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.