பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு


பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 5 Sept 2022 8:14 PM IST (Updated: 5 Sept 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம்,

திண்டிவனம் அருகே உள்ள கம்பூர் கிராமத்தில் கல்வெட்டுடன் கூடிய பல்லவர் கால கொற்றவை சிற்பத்தை விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரமேஷ், ஜெயின் மகளிர் கல்லூரி சமஸ்கிருத துறைத்தலைவர் ரமாசேகர், தொல்லியல் ஆய்வாளர் சென்னை விஜய் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

இந்த கொற்றவை சிற்பம், 4 கரங்களுடன் தாமரை மலரில் நிற்பது போன்று காணப்படுகிறது. 4 கரங்களின் முறையை வலது மேற்கரத்தில் பிரயோக சக்கரமும், இடது மேற்கரத்தில் சக்கரமும் பெற்று வலது கீழ்கரம் நீண்ட வாலையும், இடது கீழ்கரம் தொடை மீது வைத்தவாறும் உள்ளன. வலது தோலுக்கு மேலாக குடையும், இடது தோலுக்கு மேலாக திரிசூலமும் காணப்படுகிறது. சிம்மத்தின் மேல் கிளி ஒன்றும் உள்ளது.

மேலும் சிம்மத்தின் கீழ்புறம் 3 வரிகளில். " மாரி செய்வித்த படிமம் " என்னும் கல்வெட்டு வாசகம் காணப்படுகிறது. மாரி என்பவர் கொற்றவை சிற்பத்தை செய்து கொடுத்துள்ளார் என்பது இதன் பொருளாகும். இதன் எழுத்தமைதியை கொண்டு இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு எனலாம். அதாவது பல்லவர்கள் காலத்தில் இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எழுத்து பொறிக்கப்பட்ட சிற்பங்கள் அரிதாக கிடைக்கின்றன. அந்த வகையில் இந்த கொற்றவை சிற்பம் முக்கியம் வாய்ந்ததாகும். இச்சிற்பத்தை வைத்து பல்லவர் காலத்தில் கம்பூர் சிறப்பு பெற்ற பழமையான ஊர் என்பதை அறியலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story