புதுக்கோட்டை மாவட்ட எல்லை அருகே மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்ட எல்லை அருகே மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
மகாவீரர் சிற்பம்
புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் ஆவுடையார்கோவில் அருகே சிவகங்கை மாவட்டம் சிறுகானூர் கிராமத்தில் புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தினர் கள ஆய்வு செய்தனர். அப்போது மகாவீரர் சமண சிற்பம் மற்றும் முக்குடை நிலதான கோட்டுருவ நடுகல் ஆகியவற்றை கண்டெடுத்துள்ளனர். இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது:-
முக்குடை கல்லின் மையத்தில் காணப்படும் முக்குடை அமைப்பு சமண சமயத்தின் முக்காலத்தையும் உணர்த்தும் சமணத்தின் புனித சின்னமாகும். இதன் இரு புறங்களிலும் குத்துவிளக்கு பொறிக்கப்பட்டிருக்கிறது. இதன் காலம் 12-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம்.
3 சிங்க முத்திரை கொண்ட அரியாசனம்
குண்டோடி காளி என்ற பெயரில் வழிபாட்டிலிருக்கும் மகாவீரர் சிற்பம், 2¼ அடி அகலத்துடனும், 3½ அடி உயரத்துடனும் வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரர் திகம்பரராக, தியான கோலத்துடன், சுருள் முடி தலையுடனும் அமைக்கப்பட்டுள்ளது. 3 சிங்க முத்திரை கொண்ட அரியாசனத்தில் மகாவீரர் அமர்ந்த கோலத்தில் உள்ளது. இதன் உருவமைப்பு ஒப்பீட்டின்படி 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பமாக கருதலாம்.
ஆவுடையார்கோவிலின் மண்டபக்கூரையில் சமணர்கள் கழுவேற்றிய காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. திருப்புனவாசல் கோவில் கருவறை விமானத்தின் தென்புற பிரஸ்தர பகுதியில் சமண கழுவேற்றும் சிற்பமும் அருகே மன்னன் மற்றும் சைவத்துறவி ஒருவர் நிற்பதுமாக செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் 14-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். இருப்பினும் ஆவுடையார்கோவில் பகுதியில் சமண சிற்பம் எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில் இந்த சிற்பம் புதிய ஆய்வுகளுக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.