இரண்டாம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருக்கோவிலூரில் இரண்டாம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் கபிலர் தொன்மை ஆய்வு மையத்தினர், தலைவர் சிங்கார உதியன் தலைமையில் திருக்கோவிலூர் பிடாரி அம்மன் கோவில் எதிரே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டாம் குலோத்துங்கன் கால கல்வெட்டை கண்டுபிடித்தனர். சாலையோரம் நடப்பட்டிருந்த அந்த கல்வெட்டை, கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், திருவண்ணாமலை கருணாநிதி கலைக்கல்லூரியின் வரலாற்று துறைத்தலைவர், இணை பேராசிரியர் ஸ்தனிஸ்லாஸ், நல்நூலகர் அன்பழகன், கலியபெருமாள் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க தே... (வர்க்கு), வளநாட்டு மிலாட்டுக் குறுக்கை கூற்றத்து திருக்.... (கோவலூர்), கைக்கொண்டு அருளுகிற.... (ஆ) ளுடைய நாயனார் (க்கு), இத்திணென் திருநாவலூர்.... செவ்வனே நேயனே என கல்வெட்டில் வெட்டப்பட்டிருந்தது தெரிந்தது.
இந்த கல்வெட்டு உடைந்திருந்ததால், முழுமையான செய்தியை அறிய இயலவில்லை. இந்த ஆய்வில் கபிலர் தொன்மை ஆய்வு மையத்தை சேர்ந்த மணம்பூண்டி ரவி, வானவில் ஜெயக்குமார், கவிநிலவன், கலைச்சித்தன், கண்ணன், பிரகாஷ் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.