திருமங்கலம் அருகே குராயூர் கிராமத்தில் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கல்வெட்டு கண்டெடுப்பு
திருமங்கலம் அருகே குராயூர் கிராமத்தில் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே குராயூர் கிராமத்தில் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
கல்வெட்டு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குராயூர் மாசவநத்தம் கிராமத்தில் ஒரு பழமையான எழுத்துக்கள் பொறித்த கல் ஒன்று கண்மாய் மடையில் இருப்பதாக பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஸ்ரீதர் மற்றும் நாகரத்தினம், அங்காளம்மாள், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்று துறையின் உதவி பேராசிரியர் தாமரைக்கண்ணன் அங்கு சென்று கள மேற்பரப்பாய்வு செய்தனர். அதில் நாயக்கர் காலத்தில் நீர் மேலாண்மைக்கு உதவும் விதமாக குமிழித்தூம்பினை மராமத்து செய்தது தொடர்பாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
நம் முன்னோர்கள் நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து சங்க காலம் முதலே செய்து வந்த செயல்களுக்கு ஆதாரங்கள் கொட்டி கிடக்கின்றன. அவற்றில் இந்த கல்வெட்டு தலை சிறந்ததாகும். அவற்றைப் போன்று தமிழ்நாடு முழுவதும் ஏரிகளும், கண்மாய்களும், குளங்களும், குட்டைகளும் வெட்டி கொடுத்து வேளாண்மையை நம் தமிழக மன்னர்கள் பெருக்கி வந்துள்ளனர். அவ்வாறு வேளாண்மைக்கு உதவும் விதமாக நீர் நிலைகளிலும், கண்மாய்களின் மடைகளில் குமிழித்தூம்பு வைத்து நீரினை விளைநிலங்களுக்கு பாய்ச்சுவதற்கு பயன்பட்டு வந்துள்ளது.
மங்களச்சொல்
நாம் கண்டறிந்த கல்வெட்டு மாசவநத்தம் கண்மாயில் குமிழித்தூம்பில் ஒரு கல்லினை நட்டு வைத்து தமிழ் எழுத்துக்களை பொறித்து வைத்துள்ளனர். இந்த கல்வெட்டில் இரண்டு புறங்களில் எழுத்துப்பொறிப்பு காணப்படுகிறது. ஒரு பக்கம் 31 வரிகளும், மற்றொரு பக்கம் எட்டு வரிகளும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் 31 வரிகளில் முதல் 2 வரிகளில் மங்களச்சொல் இடம் பெற்று இருக்க வேண்டும். அவை முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
மூன்றாவது வரியிலிருந்து சற்றே பொருள் கொள்ளும்படி இடம்பெற்றுள்ளது. அவற்றில் "சாலிவாகன சகாப்தம் தாரண வருடம் வைகாசி மாதம் 21-ம் நாளில் இந்த மானியம் மகாராசாவினால் கொடுக்கப்பட்டுள்ளது" என்ற செய்தியும் "திருமங்கலம் வகையறாவை சேர்ந்த திருசீலராச வேங்கடப்பர் செய்து கொடுத்த மராமத்து" என்று எழுதப்பட்டுள்ளது இந்த கல்லை சேதப்படுத்தியவர்கள் காராம்பசுவை கொன்ற பாவத்தில் வீழ்வீர் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
400 ஆண்டுகளுக்கு முற்பட்டது
இரண்டாவது கல்வெட்டில் "குராயூர் உபகிராமம் வேங்கட வாசு சமுத்திரம் கண்மாய்" என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது மாசவநத்தம் கிராமம் குராயூரின் உபகிராமமாக இருந்துள்ளது. மேலும் இன்றைய மாசவநத்தம் என்ற கிராமம் நாயக்கர் காலத்திலும் அதற்கு முன்பும் "வேங்கடவாசு சமுத்திரம்" என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறியலாம். இந்த கல்வெட்டின் காலம் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாயக்கர் காலத்தை சேர்ந்ததாக கருதலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.