ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு, இயக்குனர் தங்கர்பச்சான் கோரிக்கை


ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு, இயக்குனர் தங்கர்பச்சான் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Jan 2023 6:45 PM GMT (Updated: 18 Jan 2023 5:46 AM GMT)

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, இயக்குனர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

கடலூர்

நெய்வேலி,

சினிமா திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு எங்கு இருக்கிறது என அனைவரது பார்வையையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டம் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். ஜல்லிக்கட்டு காளைகளை வைத்துக்கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நாம் நடத்திவிட முடியாது. அந்த காளைகளை அடக்கக்கூடிய வீரர்கள் நமக்கு தேவை.

ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கடந்த 2021, 22-ம் ஆண்டு முதல் மாடுபிடி வீரர்களுக்கு முதல் பரிசாக கார் வழங்கி வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி முதல் பரிசாக கார்களை வாங்கியவர்கள் இப்பொழுது எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதை ஆய்வு செய்யுங்கள். கார்களை பரிசாக பெற்ற அந்த வீரர்கள் சமுதாயத்தில் எந்த பொருளாதாரத்திலும் உயர முடியாது. ஜல்லிக்கட்டு காளைகளை பாதுகாப்பது அரசின் கடமை. அதேபோல ஜல்லிக்கட்டு வீரர்களையும் காப்பது அரசின் கடமை.

எனவே மாடுபிடி வீரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆண்டுக்கு 5 மாடுபிடி வீரர்களை தேர்வு செய்து நபருக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கி அரசு உதவி செய்யலாம். மாடுபிடி வீரர்களுக்கு நிலங்கள் தரலாம், வீடு கட்டித் தரலாம்.

விவசாயத்தோடு இணைந்து தொடர்ந்து பயிற்சி பெற இத்தகைய அரசின் உதவிகள் உதவும். மாடுபிடி வீரர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஊக்குவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story