ஆலங்குடி, அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல்
ஆலங்குடி, அறந்தாங்கி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காயை ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது.
கொப்பரை தேங்காய்
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது கொப்பரை தேங்காய் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 200 மெட்ரிக் டன் அரவை கொப்பரையும், அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 600 மெட்ரிக் டன் அரவை கொப்பரையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசினால் 2023-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான அரவை கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். கொப்பரை கொள்முதல் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைமுறையில் இருக்கும்.
வங்கி கணக்கில் வரவு
இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் கொப்பரைக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். மத்திய அரசின் கொள்முதல் நிறுவனம் குறைந்தபட்ச தரத்தினை பரிந்துரைத்துள்ளது. அதன்படி அரவை கொப்பரையின் குறைந்தபட்ச தரம், அயல்பொருட்கள் (1 சதவீதம்) பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதம் (எண்ணிக்கையில்) சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீதம் (எண்ணிக்கையில்) சில்லுகள் 10 சதவீதம் (எடையில்) ஈரப்பதம் 6 சதவீதம் கொண்டதாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயனடையலாம் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.