நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்


நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்
x

கோடை அறுவடை தொடங்கிய நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் குைறதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

கண்ணீர் விட்டு அழுத பெண்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மனு கொடுக்க வந்த தெம்மாவூரை சேர்ந்த பாக்கியம் (வயது 38) என்பவர் கண்ணீர் விட்டு அழுதபடி கலெக்டரின் காலில் விழ முயன்றார்.

அவரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் கேட்ட போது, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தனக்கு வீடு கட்ட பயனாளியாக தேர்வு செய்யப்பட்ட பின் பணம் இதுவரை வழங்கப்படாமல் இருப்பதாகவும், பணம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். மேலும் தான் வீடு கட்டிய புகைப்படங்களை வைத்திருந்தார். பயனாளிக்கான ஆணை வழங்கப்பட்டதையும் அவர் காண்பித்தார். இதையடுத்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நெல் கொள்முதல் நிலையங்கள்

கூட்டத்தில் இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் தனபதி பேசுகையில், ''வடசேரிப்பட்டியில் இந்த ஆண்டு கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும். கருக்காக்குறிச்சியில் மின்சார வாரிய பிரிவு அலுவலகம் தொடங்க வேண்டும். மூட்டாம்பட்டி கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். கோடை நெல் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்'' என்றார்.

கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவர் ரமேஷ் பேசுகையில், ''குளங்களில் வண்டல் மண் எடுக்க நேற்று முன்தினத்துடன் அனுமதி முடிவடைந்தது. இதனை நீட்டித்து அனுமதி வழங்க வேண்டும். மேற்பனைக்காடு முதல் மும்பாலை வரை கல்லணை கால்வாய் பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். கலக்குடி ஏரியில் தைல மரங்களை அகற்ற வேண்டும்'' என்றார்.

வரத்து வாரிகளை தூர்வாருதல்

இதேபோல வரத்து வாரிகளை தூர்வார வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் கலெக்டர் கவிதாராமு பதில் அளித்து பேசியதாவது:- விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உர இருப்பை பொருத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மே மாதத்திற்கு தேவையான யூரியா வினியோகத்திட்ட இலக்கின்படி 1,500 மெட்ரிக் டன்களுக்கு, இதுவரை 1,689 மெட்ரிக் டன் யூரியா பெறப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்கு தேவையான டி.ஏ.பி. உரம் வினியோகத் திட்ட இலக்கின்படி 710 மெட்ரிக் டன்களுக்கு 624 மெட்ரிக் டன் வரப்பெற்றுள்ளது. பொட்டாஷ் உரத்தை பொறுத்துவரை வினியோகத் திட்ட இலக்கான 35 மெட்ரிக் டன்களுக்கு இதுவரை 85 மெட்ரிக் டன் பெறப்பட்டுள்ளது. காம்ப்ளக்ஸ் உரங்களை பொறுத்தவரை வினி யோகத்திட்ட இலக்கான 815 மெ.டன்களுக்கு இதுவரை 790 மெ.டன் பெறப்பட்டுள்ளது.

உரங்கள் இருப்பு

விவசாயிகளுக்கு தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 2,241 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 806 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 475 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 2,749 மெட்ரிக் டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தில் 508 மெட்ரிக் டன் யூரியா, 384 மெட்ரிக் டன் டிஏபி, 111 மெட்ரிக் டன் பொட்டாஷ், 876 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் தனலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story