பொது ஊழியரைத் தண்டிக்க லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் அவசியம் இல்லை - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மநீம வரவேற்பு
பொது ஊழியரைத் தண்டிக்க லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் அவசியம் இல்லை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
லஞ்சம் வாங்கும் பொது ஊழியர்கள் மீது விசாரணை நீதிமன்றங்கள் எவ்வித கருணையும் காட்டாமல் மிகவும் கண்டிப்புடன் விசாரணையை நடத்தவேண்டும் எனும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்திலும் லஞ்சத்தின் கொடும்கரங்கள் நம்மைத் துரத்துகின்றன. இரண்டாண்டுகளுக்கு முன் 'தமிழகத்தின் லஞ்சப் பட்டியலை' மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் அதிரடியாக வெளியிட்டார்.
அன்றிருந்த அரசும், இன்றிருக்கும் அரசும் அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொது ஊழியரைத் தண்டிக்க லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் அவசியம் இல்லை என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இந்தத் தீர்ப்பினை வரவேற்கிறோம். லஞ்சம் வாங்கும் பொது ஊழியர்கள் மீது விசாரணை நீதிமன்றங்கள் எவ்வித கருணையும் காட்டாமல் மிகவும் கண்டிப்புடன் விசாரணையை நடத்தவேண்டும் எனும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மக்கள் நீதி மய்யம் பாராட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளது.