காரில் கருப்பு நிற கண்ணாடி, நம்பர் பிளேட் விதிமீறல் திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம்
காரில் கருப்பு நிற கண்ணாடி, நம்பர் பிளேட் விதிமீறல் உள்ளிட்டவைக்காக திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதற்கும். மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றவும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் வாகன தணிக்கை மூலம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரின் சமூக வலைதளத்தில் அதிக அளவில் சாலை விதிமீறல்கள் குறித்த புகார்கள் வருகின்றன. இந்த புகாரின் மீது போக்குவரத்து போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி உண்மையாகவே விதிமீறலில் ஈடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையை அடுத்த ஆலந்தூர் மெட்ரோ ெரயில் நிலையம் அருகே வெள்ளை நிற காரில் தமிழ்நாடு அரசு இலட்சினை பொருத்தி சென்றுள்ளது.
அந்த காரில் கருப்பு நிற 'ஸ்டிக்கர்' அடர்த்தியாக ஒட்டப்பட்டு, பம்பர் பொருத்தப்பட்டு உள்ளதுடன், நம்பர் பிளேட்டும் சரியாக இல்லை எனக்கூறி ஒருவர் சென்னை போக்குவரத்து காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் புகார் அளித்திருந்தார்.இதனை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் உறுதி செய்த சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், 3 போக்குவரத்து விதிமீறல்களுக்கும் சேர்த்து ரூ.2,500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கார் கண்ணாடியில் கருப்பு நிறி 'ஸ்டிக்கர்' ஒட்டியதற்காக ரூ.500 அபராதமும், நம்பர் பிளேட் முறையாக இல்லாததால் ரூ.1,500 அபராதமும், பம்பர் பொருத்தியதற்காக ரூ.500 என ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான சலான் புகார் அளித்தவருக்கு சமூக வலைதளத்தில் பதிலாக போக்குவரத்து காவல்துறை பதிவு செய்துள்ளது.
இது பற்றி பரங்கிமலை போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு சொந்தமானது எனவும், அரசு பதவியில் இருப்பதால் தமிழக அரசின் இலட்சினையை தனது சொந்த காரில் பொருத்தி இருப்பதாகவும் தெரியவந்தது.
எனினும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அடிப்படையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.