திண்டுக்கல்: கஞ்சா போதையில் தகராறு செய்த முதியவர் குத்திக்கொலை - மகன் வெறிச்செயல்...!
திண்டுக்கல் அருகே கஞ்சா போதையில் வீட்டில் தகராறு செய்த தந்தையை கத்தியால் மகன் குத்திக்கொலை செய்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே டி.அயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன்(63வயது), இவரது மனைவி பாக்கியம்(50). இவர்களுக்கு நந்தினி என்ற மகளும், சரவணகுமார் (20), சிவா (17) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். மகள் நந்தினி திருமணம் முடிந்து அவரது கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இரண்டு மகன்களுடன் காளியப்பன் அவரது மனைவியும் ஒரே வீட்டில் வசித்து வந்துவந்தனர். காளியப்பன் கஞ்சா போதையில் அடிக்கடி வீட்டில் தகராறு செய்துவந்ததாக கூறப்படுகின்றது.
இதேபோன்று நேற்று இரவு வழக்கம் போல் அவர் கஞ்சா போதையில் அவரது மனைவி பாக்கியம் மற்றும் மகன்களை ஆபாசமாக பேசி தாக்கவும் முயன்றுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மகன் சரவணக்குமார் வீட்டில் இருந்த கத்தியால் தந்தை காளியப்பன் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே காளியப்பன் உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த வேடசந்தூர் போலீசார் உயிரிழந்த காளியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வாலிபர் சரவணகுமாரை வேடசந்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.