'தினத்தந்தி' செய்தி எதிரொலி: ஏகணிவயல் பெரிய ஏரியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ஏகணிவயல் பெரிய ஏரியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டது.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஏகணிவயல் ஊராட்சியில் உள்ள புறங்காடு கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட சிறிஞ்ச் ஊசிகள், காலாவதியான மருந்து, மாத்திரைகள், மருத்துவ கழிவுகளை இரவு நேரத்தில் மர்ம ஆசாமிகள் கொட்டி சென்றனர். இதனால் அந்த நீரை பயன்படுத்தும் விவசாயிகள், பொதுமக்கள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த 12-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, ஏகணிவயல் ஊராட்சி மூலமாக பொக்லைன் எந்திரம் மூலம் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் 6 அடி ஆழத்திற்கு குழியை தோண்டி மருத்துவக்கழிவுகள் புதைக்கப்பட்டன. இதனைதொடர்ந்து நடவடிக்கை எடுத்து ஊராட்சி நிர்வாகத்திற்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.