"தினத்தந்தி" செய்தி எதிரொலி: புதுப்பொலிவு பெற்ற ரேஷன் கடை
"தினத்தந்தி" செய்தி எதிரொலியாக ரேஷன்கடை புதுப்பொலிவு பெற்றது.
மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்சீலி வடக்கு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இருந்தது. இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் பொருட்களை வாங்கி சென்றனர். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் திருநாவுக்கரசு அறிவுரையின்படி, சார்பதிவாளர் சித்ரா மேற்பார்வையில், மண்ணச்சநல்லூர் வட்ட வழங்கல் அலுவலர் மரகதவல்லி, திருப்பைஞ்சீலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் சேதம் அடைந்து இருந்த ரேஷன் கடை கட்டித்தின் உள்புறம், பொதுமக்கள் நிற்கும் இடம், பொருட்கள் வைக்கும் அறையின் மேற்கூரை மற்றும் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் பணியாளர்கள் மூலம் மராமத்து செய்து வர்ணம் பூசி உள்ளனர். இதனால் இந்த கட்டிடம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.