தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
சிவகங்கை நகரில் உள்ள தெருக்களில் நாய்கள் தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால் தெருக்களில் செல்லும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் அச்சப்படுகின்றனர். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, சிவகங்கை.
நடவடிக்கை தேவை
சிவகங்கை மாவட்டம் வள்ளனேரி ஊராட்சி மேலவெள்ளஞ்சி கிராமத்தில் தெற்கு தெருவில் சாலையை உடைத்து அதன் குறுக்கே கழிவு நீர் வாய்க்கால் கட்டப்பட்டது. பின்னர் அந்த உடைப்பை சரி செய்ய சாலையில் மேல் தளம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த மேல்தளம் உடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையின் மேல்தளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முக துரை, மேலவெள்ளஞ்சி.
போக்குவரத்து நெரிசல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், காரைக்குடி.
பஸ் வசதி வேண்டும்
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் போதுமான அளவில் பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அப்பகுதி மக்கள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் பஸ் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, கல்லல்.
குடிநீர் குழாய் உடைப்பு
சிவகங்கை மாவட்டம் கல்லல் போலீஸ் நிலையம் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ஒரு வார காலமாக சர்ச் ரோடு நெடுஞ்சாலையில் வீணாகிறது. இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும்.
பொதுமக்கள், கல்லல்.