தினத்தந்தி செய்தி எதிரொலி: பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் முத்துசாமி தகவல்
வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புறநகர் பஸ் நிலையம் பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பில் புறநகர் பஸ் நிலையம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால்தான் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு என்ற செய்தி படத்துடன் நேற்றைய தினத்தந்தியில் வெளியானது. இந்த நிலையில் நேற்று தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் அதிகாரிகளிடம் இன்னும் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்து விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது 82 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. விரைவாக பணிகளை முடித்து பொங்கல் பண்டிகைக்குள் புறநகர் பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பஸ் நிலையத்தில் 2,350 பஸ்கள் வந்து செல்லும் வகையில் மிகப்பெரிய பஸ் நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி சாலையில் இருந்து பஸ் நிலையத்திற்கு உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் எந்த விதமான போக்குவரத்து இடையூறுகள் இல்லாதப்படி மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழக அரசும் இணைந்து நடவடிக்கை எடுத்து அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
மேலும் பயணிகள் சிரமமின்றி செல்வதற்காக கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே ரெயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழக அரசும் இணைந்து நடவடிக்கை எடுத்து அதற்கான பணிகளை விரைவில் தொடங்கப்படும். அதற்காக பணிகளை இன்னும் 3 மாதங்களில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மேலும் மக்களின் தேவைக்கு ஏற்ப இந்த புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.