பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி
ஆபத்தான கம்பி
ஈரோடு முனிசிபல் காலனி பாப்பாத்திக்காடு 2-வது வீதியில் மின்கம்பத்தின் அடிப்பகுதி போல் இரும்பு கம்பி உள்ளது. இது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் டயர்களை பதம் பார்க்கிறது. மேலும் சாலையோரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களில் குத்தி விடுகிறது. மேலும் இரவு நேரத்தில் சாலையில் கம்பி இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்கள் அதில் மோதி விபத்து ஏற்பட நேரிடுகிறது. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த கம்பியை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முனிசிபல் காலனி.
மேடும் பள்ளமுமான சாலை
கோபி சத்தியமங்கலம் ரோட்டில் கோபி நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. அந்த ரோட்டில் ஒரு இடத்தில் குழி தோண்டப்பட்டு அது மூடப்பட்டு உள்ளது. ஆனால் குழி சரியாக மூடப்படவில்லை. இதனால் ரோடு பழுதடைந்து மேடும், பள்ளமுமாக காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த ரோட்டில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இரவு ேநரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி கீழே விழுந்து காயம் அடையும் வாய்ப்பும் உள்ளது. எனவே பழுதடைந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
விபத்தை உண்டாக்கும் சாலை
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் சென்னம்பட்டி முதல் கொமராயனுர் தொட்டி கிணறு வரை செல்லும் ரோடு ஜல்லிகள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொட்டி கிணறு-கொளத்தூர் ரோட்டை உடனே சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், சென்னம்பட்டி.
தடுப்புச்சுவர் இல்லாத பாலம்
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த சின்ன மொடச்சூர் சேரன்நகரில் ஓடை பாலம் உள்ளது. அதன் தடுப்புச்சுவர் உடைந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவனுடன் ஸ்கூட்டரில் சென்றவர் தடுப்புச்சுவர் இல்லாததால் தடுமாறி வாய்க்காலில் விழுந்துவிட்டார். இதில் அவர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர். எனவே அங்கு தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகஸ்டின், கோபி.
நாய்கள் தொல்லை
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூரில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. ஆடு, மாடுகளையும் ,சில நேரங்களில் தெருவில் நடந்து செல்வோரையும் துரத்தி சென்று கடித்து விடுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரம்மதேசம் புதூரில் சுற்றுத்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி.சரவணன். பிரம்மதேசம் புதூர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
அந்தியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ரோட்டில் பல நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. உடனே குப்பைகளை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.சின்னண்ணன், அந்தியூர்.