பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
x

தினத்தந்தி புகாா் பெட்டி

ஈரோடு

மின்கம்பத்தில் செடி

புஞ்சைதுறையம்பாளையத்தில் உள்ள தேவாலயம் வீதியில் ஒரு மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் உள்ள மேல் பகுதி செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி தென்னை மரத்தின் கிளைகளும் மின் கம்பியில் உரசுகிறது. மேலும் மின் கம்பியில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளதால் அதன் மூலம் மின் கசிவு ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பத்தில் வளர்ந்து உள்ள செடி, கொடிகளை அகற்ற மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புஞ்சைதுறையம்பாளையம்.

ஆமை வேகத்தில் பணி

அந்தியூரில் இருந்து பவானி செல்லும் சாலையில் அண்ணாமடுவு என்ற இடத்தில் பாலம் கட்டும் வேலை நடைபெற்று வருகிறது. மேலும் மழை பெய்தால் அந்த பகுதியில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், அந்தியூர்.

கூடுதல் பஸ்விட வேண்டும்

பர்கூர் மலைப்பகுதியின் மேற்கு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மருத்துவ வசதிக்காக அந்தியூர் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் அந்தியூரில் இருந்து மலைப்பகுதியில் உள்ள கொங்காடை கிராமத்துக்கு ஒரே ஒரு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், பர்கூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடம் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அந்த பகுதியை கடக்கும்போது மூக்ைக பிடித்தபடி செல்கிறார்கள். எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

பாராட்டு

அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் கிராமத்தில் 50 மீட்டர் தூரத்துக்கு சாக்கடை வடிகால் அமைக்க குழி தோண்டப்பட்டது. சாக்கடை வடிகால் அமைக்காததால் கழிவுநீர் தேங்கி அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து புதுக்காட்டூர் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டது. எனவே இதுபற்றி செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

சண்முகவேல், அந்தியூர்.


Next Story