மாத்தூர் பீளிகான் முனீஸ்வரர் கோவிலில் தீமிதி விழா
மாத்தூர் பீளிகான் முனீஸ்வரர் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.
விராலிமலை ஒன்றியம், மாத்தூர் சொக்கலிங்கபுரத்தில் பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அங்காள ஈஸ்வரி, சக்தி விநாயகர், முன்னோடி பூச்சி அய்யா ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி விழா விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான தீமிதி விழா நேற்று மாலை நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் உள்ள ஊரணியில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கோவிலில் வாண வேடிக்கை, அதிர்வெட்டுகள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் மாத்தூர், மண்டையூர், திருச்சி விமான நிலையம், குண்டூர் பர்மா காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் தினமும் அன்னதானம் நடைபெற்றது. மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.