திரவுபதி அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா
சு.ஆடுதுறை, உஞ்சினியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழா
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு 21 நாட்கள் தினமும் உற்சவ விழா நடைபெற்றது. இதில் 18-ம் நாளான நேற்று காலை அரவான் கடபலி, பத்ரகாளி அம்மன் வீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலை கூந்தல் முடிப்பு, அதன் பின்னர் மாலை 7 மணி அளவில் தீமிதி திருவிழா நடந்தது. இரவு 8 மணி அளவில் கோவிலில் சிறப்பு பூஜையும், சாமி திருவீதி உலாவும், நாடகமும் நடைபெற்றன. இதில் ஊர் முக்கியஸ்தர்கள், திரளான பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
செந்துறை...
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 7-ந் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மகாபாரத கதைகளும், அம்மன் அலங்கார வழிபாடுகளும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் தீமிதி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தீ குண்டம் அருகே திரவுபதி அம்மன் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக அரவான் கடபலி நிகழ்ச்சியும், தீமிதி திருவிழா அன்று கூந்தல் முடிப்பு விழாவும் நடைபெற்றன. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.